மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று திறக்கப்படமாட்டாது - தொல்லியல் துறை தகவல்


மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று திறக்கப்படமாட்டாது - தொல்லியல் துறை தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2021 7:26 AM GMT (Updated: 15 Aug 2021 7:26 AM GMT)

கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று திறக்கப்படமாட்டாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம்,

சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வரும்போது கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளது. 

ஆகவே கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை மூடவும், கடற்கரையில் பொதுமக்கள் செல்லவும் தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். 

கலெக்டரின் பரிந்துரையை ஏற்று இன்று கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்படமாட்டது என்றும், ஆன்லைன் நுழைவு சீட்டு முறையும் இன்று இணையதளத்தில் செயல்படாது என்றும், சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து ஏமாந்து செல்ல வேண்டாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டு முக்கிய புராதன சின்னங்களின் நுழைவு வாயில் மையங்களில் மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் தலைமையில் நேற்று தொல்லியல் துறை பணியாளர்கள் நோட்டீஸ் ஒட்டினர். மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், கடலில் குளிக்கவும் வருவாய் துறை, போலீஸ் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாமல்லபுரம் கடற்கரை சாலையில் சுற்றுலா வந்த பயணிகள் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். அவர்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர்.

Next Story