வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 16 Aug 2021 12:24 AM GMT (Updated: 16 Aug 2021 12:24 AM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் 150-வது ஆண்டு வரும் செப்டம்பர் 5-ந்தேதி தொடங்குகிறது. தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவருக்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும்.

வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இந்த நாடும், மக்களும் செலுத்த வேண்டிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் செலுத்துவதற்கு ஏற்ற தருணம் இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, ஓராண்டுக்கு வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட வேண்டும். அந்த ஓராண்டு காலத்தில் வ.உ.சி.யின் தியாக வரலாற்றையும், போராட்ட குணத்தையும், அவர் அனுபவித்த கொடுமைகளையும் இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும். அவரது வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் வரும் செப்டம்பர் 5-ந்தேதி, அவரது 150-வது பிறந்த நாளில் அவரது உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story