சொன்னீங்க...செய்தீங்களா? அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றவில்லை - மு.க.ஸ்டாலின்


சொன்னீங்க...செய்தீங்களா? அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றவில்லை - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Aug 2021 9:21 AM GMT (Updated: 16 Aug 2021 9:21 AM GMT)

வெள்ளை அறிக்கை வெளியிட்டு தி.மு.க. அரசு பின்வாங்க முயற்சிக்கவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

தமிழக சட்டசபை  பட்ஜெட் கூட்டத் தொடரின் 3 வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஸ்டேன் சுவாமி, இளங்குமரனார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் இன்று   அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் பேசும் போது 

நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும் ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது.எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும். டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான்.

நிதிநிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை கைவிட்டுவிட வேண்டாம்.அ.தி.மு.க ஆட்சியில் 715 திட்டங்களில் 537 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மக்களுக்காக திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் அல்ல என கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  எங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம் என கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் உரிமைத் தொகை என்று அறிவித்துவிட்டு தற்போது ஏழை இல்லத்தரசிகளுக்கு மட்டும் என்று கூறுகிறீர்கள்? என கூறினார்.

அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து பேசும் போது  ஏழை இல்லத்தரசிகளுக்கு மட்டும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது

வெள்ளை அறிக்கை வெளியிட்டு தி.மு.க. அரசு பின்வாங்க முயற்சிக்கவில்லை.  விவசாய நகைகடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. முறைகேடுகள் களைந்த பிறகு திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றவில்லை அ.தி.மு.க. அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் உள்ளிட்டவை என்னாச்சு? என கேள்வி எழுப்பினார். 

Next Story