பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சேலம் மாரியப்பன், குடும்பத்தினருடன் மோடி காணொலியில் கலந்துரையாடல்


பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சேலம் மாரியப்பன், குடும்பத்தினருடன் மோடி காணொலியில் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 17 Aug 2021 9:43 PM GMT (Updated: 17 Aug 2021 9:43 PM GMT)

டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சேலம் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பாரா ஒலிம்பிக் வீரர்
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 26). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் உயரம் தாண்டுதல் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு மாரியப்பன் தலைமை தாங்கி செல்லும் சிறப்பை பெற்றுள்ளார்.இந்திய அணி சார்பில் களம் இறங்க உள்ள வீரர் மாரியப்பனை ஊக்குவிக்கும் வகையில் பெங்களூருவில் பயிற்சியில் உள்ள அவருடனும், சேலம் மாவட்டம், பெரிய வடகம்பட்டியில் உள்ள அவருடைய தாயார் சரோஜா, அக்காள் சுதா, தம்பிகள் குமார், கோபி ஆகியோருடனும் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார்.

வணக்கம் கூறிய பிரதமர்
முதலில் வணக்கம் என்று கூறி மாரியப்பன் குடும்பத்தினரின் நலம் விசாரித்த மோடி, மாரியப்பன் மற்றும் குடும்பத்தினரிடம் பேசிய உரையாடல் விவரம் வருமாறு:-

பிரதமர் மோடி: ஏற்கனவே நாட்டுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தது போன்று நடைபெற உள்ள போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள் மாரியப்பன். நீங்கள் நாட்டிற்கு நற்பெயர் எடுத்து தரவேண்டும். மாரியப்பனின் தாயார்: இந்தியா மீண்டும் தங்கப்பதக்கத்தை எனது மகன் மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

நாட்டுக்கோழி, சூப்
பிரதமர் மோடி: சிறந்த மகனை பெற்றெடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன். மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார்?

மாரியப்பனின் தாயார்:- நாட்டுக்கோழி மற்றும் சூப் விரும்பி சாப்பிடுவான்.

பிரதமர் மோடி: உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள். குமார் உனது சகோதரர் மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும்.

மாரியப்பனின் சகோதரர் குமார்:- மேலும் பல பரிசுகளை இந்தியா பெறவேண்டும் என விரும்புகிறேன்.

பிரதமர் மோடி:- (மாரியப்பனின் சகோதரர் கோபியிடம்) வணக்கம், உன் மனதில் என்ன உள்ளது.

மாரியப்பனின் சகோதரர் கோபி:-மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும்.

பிரதமர் மோடி:- மாரியப்பன் போல் தாங்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.

பிரதமர் மோடி:- (மீண்டும் மாரியப்பனிடம் பேசினார்) மாரியப்பன் மீண்டும் உன்னை பாராட்டுகிறேன். உங்களின் தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன். தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

மேற்கண்டவாறு உரையாடல் நடந்தது.


Next Story