கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி


கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 18 Aug 2021 5:38 AM GMT (Updated: 18 Aug 2021 5:38 AM GMT)

மக்களை திசை திருப்ப திமுக அரசு நாடகமாடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டப்பேரவையில் இன்று கோடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களைத் தொடர்ந்து பாஜக, பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள். பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது. 

நீதிமன்ற விசாரணையின் போது சயன் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? கடைசி நேரத்தில் என்னையும் கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடக்கிறது. விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது அதனை மீண்டும் விசாரிப்பது திமுக அரசுதான். மக்களை திசை திருப்ப திமுக அரசு  நாடகமாடுகிறது. அதிமுக தலைவர்கள் மீது திமுக வீண் பழி சுமத்துகிறது.  தடைகளை தாண்டி அதிமுக வெற்றிநடை போடும்” என்றார்.


Next Story