6 ஆண்டுகளாக அதிகரித்துவரும் வருவாய் பற்றாக்குறையை இந்த ஆண்டு குறைப்போம்: நிதி அமைச்சர்


6 ஆண்டுகளாக அதிகரித்துவரும் வருவாய் பற்றாக்குறையை இந்த ஆண்டு குறைப்போம்: நிதி அமைச்சர்
x
தினத்தந்தி 19 Aug 2021 5:15 AM GMT (Updated: 19 Aug 2021 5:15 AM GMT)

6 ஆண்டுகளாக அதிகரித்துவரும் வருவாய் பற்றாக்குறையை இந்த ஆண்டு குறைப்போம் என்று சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்கூறினார்.

பச்சைத் துண்டு அணிந்து வந்தனர்
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான 3-வது நாள் விவாதத்தில் பங்கேற்று சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி (பென்னாகரம் தொகுதி) பேசினார். சட்டசபைக்கு நேற்று வந்த பா.ம.க. உறுப்பினர்கள் 5 பேருமே பச்சைத் துண்டு அணிந்துவந்தனர்.

விவாதத்தில் ஜி.கே.மணி பேசியதாவது:-

தி.மு.க. அரசுக்கு பாராட்டு
காகிதமில்லா சட்டசபை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது. பா.ம.க. கடந்த 18 ஆண்டுகளாக பொது நிழல் பட்ஜெட்டையும், 14 ஆண்டுகளாக வேளாண் நிழல் பட்ஜெட்டையும் வெளியிட்டு வருகிறது. பா.ம.க.வின் கோரிக்கை இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறோம். அதனால்தான் நாங்கள் இன்று பச்சைத் துண்டு அணிந்து வந்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி எங்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 41 ஆண்டுகளாக போராடி வருகிறார். அது நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.

தாது மணல் விற்பனை
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதுபோல, அனைத்து சாதியினருக்கும் தொகுப்பு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். பெரியார் கண்ட கனவை நனவாக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை அமல்படுத்துவதன் தொடக்கமாக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும், கடிதங்கள் அனைத்து தமிழிலேயே எழுதவேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.வரி வசூலிக்கும் நடைமுறை மாநிலங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்றால், வரி இல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும். தாது மணல் விற்பனை, வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி போன்றவற்றின் மூலம் வருவாயைப் பெருக்கலாம்.

மதுவிலக்கு
மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. மது ஒழிக்கப்பட வேண்டும். 69 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆறுகளுக்கு இடையே 5 கி.மீ. இடைவெளியில் தடுப்பணை கட்டும் பெருந்திட்டத்தை கொண்டுவர வேண்டும். அப்போதுதான், நீர் வீணாக கடலில் போய் சேராது. கர்நாடகத்தில் இந்த முறை பின்பற்றப்படுவதால், கடந்த 25 ஆண்டு காலத்தில் பாசனப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வல்லுனர் குழு
மேகதாதுவில் அணை கட்டப்படுவதைத் தடுக்க, அதை கண்காணிக்க வல்லுனர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அதிகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தார்.

வருவாய் பற்றாக்குறை
அந்த நேரத்தில் குறுக்கிட்டு பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘ஆறு மாத காலத்துக்குத்தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ரூ.35 ஆயிரம் கோடியாக உயரும்’ என்றார்.தொடர்ந்து பேசிய உறுப்பினர் ஜி.கே.மணி, ‘இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைவிட வருவாய் பற்றாக்குறை ரூ.58 ஆயிரத்து 118 கோடியாக உயர்ந்துள்ளது’ என்றார். அதற்கு பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘அகவிலைப்படி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. தி.மு.க. ஆட்சி தொடங்கியுள்ள 7-வது ஆண்டில் அதை குறைத்துக்காட்டுவோம்’ என்றார்.

கூடுதல் விளம்பரம்
அதன் பின்னர் பேசிய உறுப்பினர் ஜி.கே.மணி, ‘கொரோனா காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு கைதூக்கிவிட வேண்டும். பத்திரிகைகளுக்கு கூடுதல் விளம்பரம் கொடுக்க வேண்டும். விளம்பர கட்டணத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றார்.அதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நாளை (இன்று) பதிலளிக்கிறேன்’ என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story