ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு: மத்திய மந்திரி எல்.முருகன்


ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு: மத்திய மந்திரி எல்.முருகன்
x
தினத்தந்தி 19 Aug 2021 5:30 AM GMT (Updated: 19 Aug 2021 5:30 AM GMT)

ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு என்று நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தும் வகையில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், கடந்த 2 நாட்களாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டார்.3-வது நாளான நேற்று எல்.முருகன் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நாமக்கல் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டனர். 

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள், மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறோம்.2014-ம் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலான கிராமங்களில் கழிப்பிடங்கள் இல்லாமல் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசு தண்ணீர் வசதியுடன் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளன. விறகு அடுப்பில் சமைத்தவர்கள் இன்று கியாஸ் அடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு.

பிரதமர் ேமாடிக்கு நன்றி
எனது தாத்தா செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். எனது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு மத்திய இணை மந்திரியாக வாய்ப்பு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற எனது பணிகள் இருக்க வேண்டும். அதற்காக மக்கள் ஆசியை பெற இந்த யாத்திரையை தொடங்கி உள்ளேன்.

இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

பெற்றோரிடம் ஆசி
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன், கே.புதுப்பாளையத்தில் அவரது குலதெய்வமான நந்தகோபால் பெருமாள் கோவிலில் சாமி வழிபாடு செய்தார். அங்கு நடந்த கோமாதா பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் தனது தந்தை லோகநாதன், தாயார் வருதம்மாள் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றார். அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.கோனூர் கிராமத்தில் எல்.முருகனுக்கு, அரசு பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், பசுமை இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எல்.முருகன் சென்ற போது அங்கு ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Next Story