தமிழக சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


தமிழக சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 5:39 AM GMT (Updated: 19 Aug 2021 5:39 AM GMT)

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தமிழக முன்னாள் சிறப்பு போலீஸ் டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி டிசம்பர் 20-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என விழுப்புரம் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வேறு மாநிலத்திற்கு வழக்கு விசாரணையை மாற்றக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் டி.ஜி.பி. மேல்முறையீடு செய்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு நீக்கம்
இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியும், தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவேவும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சென்னை ஐகோர்ட்டு கடந்த 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்த பகுதியான, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை விழுப்புரம் கோர்ட்டு டிசம்பர் 20-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும், அதுதொடர்பாக டிசம்பர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஆணையையும் நீக்கி உத்தரவிடுகிறோம்.இந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை கருத்தில் கொள்ளாமல், விழுப்புரம் கோர்ட்டு சுயமாக விசாரிக்க வேண்டும்.

வேறு மாநிலத்துக்கு...
சட்ட விதிமுறைகளை பின்பற்றி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும். இதன்படி, வழக்கை ஐகோர்ட்டு கண்காணிக்க தேவையில்லை என்பதால் சென்னை ஐகோர்ட்டு தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கையும் முடித்து வைக்கிறோம்.ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவையும், வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவையும் முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Next Story