கடலூரில் போலீஸ் விசாரணையில் இறந்தவரின் மனைவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்


கடலூரில் போலீஸ் விசாரணையில் இறந்தவரின் மனைவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
x
தினத்தந்தி 20 Aug 2021 6:54 PM GMT (Updated: 20 Aug 2021 6:54 PM GMT)

கடலூரில் போலீஸ் விசாரணையில் இறந்தவரின் மனைவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ரேவதி என்பவரின் கணவர் சுப்பிரமணி கடந்த 2015-ம் ஆண்டு போலீசாரால் ஒரு வழக்கு விசாரணைக்கு நெய்வேலி டவுன்சிப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோது மரணம் அடைந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, போலீஸ்காரர்கள் செந்தில்வேல், சவுமியன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் இவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டனை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி இழப்பீட்டு தொகையான 30 லட்சத்து 9 ஆயிரத்து 648 ரூபாயை ரேவதிக்கு உடனடியாக வழங்கிட துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வரும் ரேவதிக்கும், அவரது குழந்தைகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story