எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடனம்


எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடனம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:10 PM GMT (Updated: 20 Aug 2021 11:10 PM GMT)

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் போலீசார் நடனம் ஆடி பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

சென்னை,

ரெயில்வே போலீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.

ரெயில்வே ஐ.ஜி கல்பனா நாயக் மற்றும் டி.ஐ.ஜி ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த கூடுதல் டி.ஜி.பி, ரெயில் பயணிகளுக்கு இலவசமாக 25 ஆயிரம் முககவசங்கள், கிருமிநாசினி, குளிர்பானங்கள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து ரெயில்வே பெண் போலீசார் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

ஆடல் பாடலுடன்

பெண் போலீசாரின் ஆடல் பாடலுடன் நடந்த கொரோனா விழிப்புணர்வு நாடகத்தின் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தையின் அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பெண் போலீசார் நடனம் முலம் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை சென்டிரல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால், கொரோனா தொற்று பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் இன்று (நேற்று) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story