மருத்துவ பணி நியமனங்களில் விளையாட்டு, கலாசார இடஒதுக்கீடு வழங்க வேண்டும்


மருத்துவ பணி நியமனங்களில் விளையாட்டு, கலாசார இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:13 PM GMT (Updated: 20 Aug 2021 11:13 PM GMT)

மருத்துவத்துறை பணி நியமனங்களில் விளையாட்டு, கலாசார இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். வாரியத்தின் மூலம் நடைபெறும் பணி நியமனங்களில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், கலாசாரத்தில் சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அண்டை மாநிலங்களில்...

தேசிய அளவில் ரெயில்வே துறை நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் விளையாட்டு மற்றும் கலாசார இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செவிலியர்கள், எக்ஸ்-ரே தொழில்நுட்பர்கள் , ஆய்வக தொழில்நுட்பர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பணி நியமனங்களில், சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கும், கலாசார கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசிலும் சில துறைகளின் பணிகளில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவத்துறையில் விளையாட்டு, கலாசாரக் கலைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

இட ஒதுக்கீடு

மருத்துவத் துறையில் அரசுப் பணி கிடைக்கும் என்று தெரிந்தால் இன்னும் பலர் விளையாட்டு மற்றும் கலாசாரத்தில் சாதனைப் படைக்க முயல்வார்கள். அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் பதக்கம் வெல்லவில்லை என்பது நமக்கு பெருங்குறையாக உள்ளது. இனிவரும் காலங்களிலாவது பன்னாட்டுப் போட்டிகளில் தமிழர்கள் சாதனை படைக்க வேண்டும். அதற்காக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும். கலாசாரக் கலைகளில் சிறந்து விளங்குபவர்களை அரசு வேலை வழங்கி ஊக்குவிக்கும்பட்சத்தில் அவர்களும் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தருவார்கள். இவற்றையும், பல்வேறு மாநிலங்களில் உள்ள நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமனங்களிலும் விளையாட்டு மற்றும் கலாசார இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story