தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - எதற்கெல்லாம் அனுமதி?


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - எதற்கெல்லாம் அனுமதி?
x
தினத்தந்தி 21 Aug 2021 4:03 PM GMT (Updated: 21 Aug 2021 4:03 PM GMT)

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (23.08.2021) காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்-அமைச்சர்  தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் செயல்பட செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கவும், கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும், பூங்காக்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத  பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 

* செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். மாணவர்கள் சுழற்சி முறையில் 50 சதவீத வருகையுடன் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி (இப்பள்ளிகளில்‌ மதிய உணவுத்‌ திட்டமும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்‌). 

* 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப். 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

* செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி. அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Coleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் (கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்).

* செப். 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி (அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்) 

* ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். 

* தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி

* வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட அனுமதி

* கடற்கரைகளில் மக்களுக்கு மீண்டும் அனுமதி (இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்)

* வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களில் பொறுப்பாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 

* நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொது பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

* பொது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதைத் தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

* கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

* மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/ இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Next Story