தளா்வுகளை முழுப் பொறுப்புணா்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


தளா்வுகளை முழுப் பொறுப்புணா்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Aug 2021 1:20 AM GMT (Updated: 22 Aug 2021 1:20 AM GMT)

தளா்வுகளை முழுப் பொறுப்புணா்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,

கொரோனா தொற்று ஊரடங்கில் கூடுதல் தளா்வுகளை அளித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்துக் கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக் கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகளை நிறுவ வேண்டும். கடைகளில் பணிபுரிபவா்களும், வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்துக் கடைகளும் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதுடன், கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகமான மக்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட்ட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும்.

கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு வகையான விழிப்புணா்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளா்கள் தொடா்ந்து மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நோய்ப் பரவலைத் தடுத்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், மக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அரசு அறிவித்துள்ள தளா்வுகளை பொது மக்கள் முழுப் பொறுப்புணா்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவா்களின் கல்வி, எதிா்காலம் ஆகியன பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே தளா்வுகள் அளிக்கப்ட்டுள்ளன. இதனை முறையாக உபயோகிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், அரசின் நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உதவிட வேண்டும் என  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

Next Story