சென்னைக்கு இன்று 382-வது பிறந்த நாள்!


சென்னைக்கு இன்று 382-வது பிறந்த நாள்!
x
தினத்தந்தி 22 Aug 2021 2:01 AM GMT (Updated: 22 Aug 2021 2:01 AM GMT)

பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் நகரம்தான் சென்னை. தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம். இந்த பாரம்பரிய நகரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 382-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்ற இந்த சென்னை மாநகரம், ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது. 

1639-ம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக இங்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, இதே நாளில், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை (தலைமைச்செயலகம்) அமைந்திருக்கும் பகுதியை, தாமஸ் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கியது. அவரது தந்தையான சென்னப்ப நாயக்கர் பெயரில்தான், பிற்காலத்தில் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.

சென்னை மாநகரம்
17-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்த ஆங்கிலேயர்கள், அந்த இடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். அதில், அதிகாரிகள் தங்கினார்கள். கோட்டையை சுற்றி ஊழியர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன்பிறகு, அப்பகுதி வளர்ச்சி அடைய தொடங்கியது.கிழக்கிந்திய கம்பெனியும் நெசவுத்தொழில் மூலம் தன்னுடைய வணிகத்தை பெருக்கியது. இப்போதைய சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசித்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் துணிக்கு சாயம் பூசும் தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள், செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) பகுதியில் தோட்டத்துடன் கூடிய வீடுகளை அமைத்து வசித்து வந்தனர். அங்கிருந்து தினமும் கோட்டைக்கு வந்து செல்ல புதிய சாலையை அமைத்துக்கொண்டனர். அதுதான் இன்றைய அண்ணா சாலை. இப்படித்தான் சென்னை மாநகரம் விரிவடைந்தது.

அடையாளத்தை இழந்த பரிதாபம்
ரிப்பன் கட்டிடம், விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், ஐகோர்ட்டு கட்டிடம், சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள், எழும்பூர் அருங்காட்சியகம், ராஜாஜி ஹால், விவேகானந்தர் இல்லம் என்று, ஒவ்வொரு வரலாற்று சின்னங்களும் வெவ்வேறு கதைகளை தாங்கி நிற்கின்றன. சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் என்று பெயர் மாறிவந்த நிலையில், 1996-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, சென்னை என பெயர் மாற்றம் செய்தார்.ஆரம்ப கால சென்னையின் வளர்ச்சிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய அடையாறு, கூவம், பக்கிங்காம் போன்ற ஆறுகள், நிகழ்கால சென்னையின் பிரமாண்ட வளர்ச்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், கழிவுநீர் கால்வாயாக மாறி, தங்களுடைய அடையாளத்தை இழந்துபோனதுதான் பரிதாபம். இன்றைக்கு வானுயர்ந்த கட்டிடங்கள், சொகுசு நட்சத்திர ஓட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நவீன மெட்ரோ ரெயில்கள் என்று அடுக்கடுக்கான அறிவியல் வளர்ச்சியை பிரதிபலிக்க எத்தனையோ அம்சங்கள் இருந்தாலும், அன்றைய வரலாற்று பாரம்பரியத்தை உணர்த்த ஒரு சில கட்டிடங்களே சாட்சிகளாக நிற்கின்றன. மற்ற அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

சென்னையை வாழ வைப்போம்
மனித உடல் சீராக இயங்க எப்படி ரத்த ஓட்டம் முக்கியமானதோ, அதேபோல் ஒரு நகரம் சீராக இருக்க அங்குள்ள நீரோட்டம் (ஆறுகள்) முக்கியமானதாகும். ஆனால், சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்காம் ஆகிய 3 ஆறுகளுமே கழிவுநீர் கால்வாயாக பாழ்பட்டு போய்விட்டன.ரத்தத்தில் கழிவுகள் சேர்ந்தால் எப்படி உடல் நலம் கெடுமோ, அதேபோல் நீர்நிலைகளில் கழிவுகள் கலந்தால், அந்த நகரத்தின் வளர்ச்சியே கெடும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீர் இப்போதே மோசமடைந்து வருகிறது. பல இடங்களில், பல நூறு அடி ஆழத்திற்கு ‘போர்' போட்டாலும் தண்ணீர் இல்லை. இப்படி, வாழும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் பாரம்பரிய சென்னை மாநகரத்தை மீட்டெடுக்க வழிகாண வேண்டும். நம்மை வாழ வைத்து கொண்டிருக்கும் சென்னையை நாமும் வாழ வைப்போம்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
2004-ம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்தநாள், சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று தலா 100 வீதம் 1,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மேலும், சிங்காரச்சென்னை குறித்த புகைப்பட போட்டிகள், பாலங்களின் கீழுள்ள இடங்கள், இதர பொது இடங்கள் மற்றும் சுவர்களை மறுவடிவமைக்கும் திட்ட வரைபடப் போட்டிகள் நடக்க இருக்கிறது.

கடந்த 2 நாட்களாக, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல், இன்று முதல் வரும் 28-ந்தேதி வரை சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்கள் தயார் செய்யும் போட்டி நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், இந்த ஆண்டும், மிக எளிமையாகவே சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

Next Story