தமிழக சட்டசபை இன்று கூடுகிறது


தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 23 Aug 2021 12:05 AM GMT (Updated: 23 Aug 2021 1:36 AM GMT)

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடக்கிறது.

தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (14-ந் தேதி) நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 4 நாட்கள் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். விவாதத்தின் இறுதி நாளில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

நீர்வளத் துறை

அதன்பின்னர், மொகரம் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டு, கடந்த 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியதும், நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இறுதியாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

இவ்வாறு அடுத்த மாதம் 13-ந் தேதி வரை துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்க இருக்கிறது.

Next Story