மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் நியமனம் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து


மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் நியமனம் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 23 Aug 2021 12:15 AM GMT (Updated: 23 Aug 2021 12:15 AM GMT)

மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார்.

இந்தநிலையில், மணிப்பூர் மாநில புதிய கவர்னராக தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மணிப்பூர் மாநிலத்தின் 17-வது கவர்னராக இல.கணேசன் இன்னும் ஒருவார காலத்துக்குள் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

நஜ்மா ஹெப்துல்லா

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நஜ்மா ஹெப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர், மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அந்த தொகுதியில் இருந்து, மேல்சபை எம்.பி.யாக இல.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

அதேபோல இப்போதும் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்றதும், மணிப்பூர் மாநில கவர்னர் பதவிக்கு இல.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேல் சபை எம்.பி. மற்றும் கவர்னர் பதவி நியமனங்களில் 2 தருணங்களிலும், முன்னதாக அந்த பதவியை வகித்த நஜ்மா ஹெப்துல்லாவுக்கு மாற்றாக இல.கணேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவ ரீதியாக ஒரே நாடு

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக இல.கணேசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஏற்கனவே பாரத தாயை உணர்வுப்பூர்வமாக ஒரே வீடு போலத்தான் உணர்கிறேன். மணிப்பூர் மாநில கவர்னராக என்னை நியமித்ததன் மூலம், அனுபவ ரீதியாக இது ஒரே நாடு என்பதை உணர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பாகக் கூட மத்தியபிரதேச மக்கள் மத்தியில் பணி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது மணிப்பூர் மக்கள் மத்தியில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரிய அங்கீகாரம்

மணிப்பூர் மாநிலத்துக்கு இனிமேல்தான் நான் முதல் முறையாக செல்லப்போகிறேன். கவர்னர் பதவியும் முதல் முறையாக கிடைத்திருக்கிறது. எனவே என்னுடைய பணி எப்படி என்பது போக போகத்தான் தெரியும். பாரத தேசத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் எந்த பகுதி மக்களாக இருந்தாலும், அவர்கள் நம்மவர்கள் தான். அதிலே எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.

கவர்னர் பதவி என்பது மிகப்பெரிய அங்கீகாரம். கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது அளவில்லாத மகிழ்ச்சியை தருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரையில், உழைக்கிற சாதாரண தொண்டனாக இருந்து, கொஞ்சம், கொஞ்சமாக மேலேறி வந்து, பல பொறுப்புகளை வகித்து வந்தாலும் கூட, இன்னமும் கூட ஒரு அங்கீகாரம் தந்து பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிற நினைப்பு பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. அதற்காக குறிப்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமிக்கப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக இல.கணேசனுக்கு வாழ்த்துகிறேன். மணிப்பூர் மாநில மக்களுக்கு ஒளிமயமான சேவைகளை வழங்கவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இல.கணேசனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘மணிப்பூர் மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள தலைவர் கலைஞரின் அன்பை பெற்ற பண்பாளரும், நீண்ட அரசியல் அனுபவத்துக்கு சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

எல்.முருகன்

சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் இல.கணேசனை நேரில் சந்தித்து மத்திய மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த உவகை அளிக்கும் செய்தியாக வந்துள்ளது. தமிழக பா.ஜ.க. மாநில தலைவராகவும், எம்.பி.யாகவும் அவர் ஆற்றிய மக்கள் நல பணிகளை இப்போது மணிப்பூர் மாநில கவர்னராக நிறைவேற்ற இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை உள்பட முன்னணி, மூத்த நிர்வாகிகளும், இல.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, பா.ஜ.க. நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரும் இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் உள்பட பலரும் இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை குறிப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர சேவகரான இல.கணேசன் பா.ஜ.க. மாநில தலைவர், தேசிய செயலாளர், அகில இந்திய துணை தலைவர், மாநிலங்களவை எம்.பி. என பல்வேறு பதவிகளை கடந்து தற்போது கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரசு பணியை துறந்தவர்

கோவில் நகரமான தஞ்சாவூரில் 1945-ம் ஆண்டு பிறந்தவர் இல.கணேசன். அவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். இல.கணேசனுக்கு 9 வயது இருக்கும்போது, அவருடைய தந்தையார் லட்சுமி ராகவ அய்யர் காலமானார். எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்தப்பிறகு வருவாய்த்துறையில் வருவாய் தீர்வக ஆய்வாளர் பணியில் சேர்ந்தார்.

நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பணியை துறந்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேர சேவகராக மாறினார். 1975-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளராக இல.கணேசன் இருந்தார்.

பா.ஜ.க.வில் இருந்து வந்த அழைப்பு

மீனாட்சிபுரம் மதமாற்றம் மற்றும் மண்டைக்காடு கலவரத்தில் இந்துக்களின் நலன்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக மூத்த தலைவர்கள் அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். இந்துக்கள் இடையே ஒற்றுமை மற்றும் அமைதி ஏற்பட ஓய்வின்றி முயற்சிகளை மேற்கொண்டவர். 1991-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக இணை அமைப்பாளராக இருந்தபோது, பா.ஜ.க.வுக்கு வந்தார்.

பா.ஜனதாவுக்கு தமிழக மக்களிடம் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தவர். இவர் பா.ஜ.க.வில் மாநில அமைப்பு செயலாளர், தேசிய செயலாளர், அகில இந்திய துணை தலைவர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

‘பொற்றாமரை’

பொது வாழ்க்கையில் ஓய்வறியாத இல.கணேசன் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் இருந்து மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 18 மாதங்கள் சேவையாற்றினார். 1991-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். அன்று முதல், அனைத்து செயற்குழு கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டு வந்தார்.

பா.ஜ.க.வின் ஊடகமான ‘ஒரே தேசம்' ஆசிரியராக உள்ளார். தமிழ் அறிஞர்களின் இலக்கிய சேவைகளை கவுரவித்து வரும் ‘பொற்றாமரை' சங்கத்தின் நிறுவன தலைவராகவும் இருக்கிறார். அந்த சங்கத்தின் சார்பில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் அறிஞர்கள், இலக்கிய சேவையாற்றியவர்கள், இசை மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் புலமை பெற்றவர். அவர் ஒரு நல்ல பாடகரும் கூட. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வில் அவருடைய பாடல்கள் பிரசித்தி பெற்றது.

Next Story