கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆட்சியர் அறிவிப்பு


கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆட்சியர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 2:44 AM GMT (Updated: 23 Aug 2021 2:44 AM GMT)

கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.



கோவை,

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்து வந்தபோதிலும், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.  இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.  ஓணம் பண்டிகையும் கட்டுப்பாடுகளுடனேயே கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில், கேரள எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக பதிவாகி வருகிறது.  இதனை முன்னிட்டு, கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்று கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஞாயிற்று கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கலாம்.  பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.

கோவைக்கு விமானம் மற்றும் ரெயிலில் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story