‘என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர்' சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


‘என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 24 Aug 2021 10:13 PM GMT (Updated: 24 Aug 2021 10:13 PM GMT)

கருணாநிதி நினைவிட வரவேற்பை வரவேற்று பேசிய சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தனது தந்தை தீவிர கருணாநிதி பக்தர் என்று தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். கட்சி எல்லைகளை கடந்து அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளும், தி.மு.க. கூட்டணி கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன.

ஓ.பன்னீர்செல்வம்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) வரவேற்று பேசியதாவது:-

கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். கருணாநிதி பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களில் அனல் பறக்கும் சீர்திருத்த கருத்துகள் நிறைந்திருக்கும்.

என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் ‘பராசக்தி' பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். எங்களின் எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில் இந்த அறிவிப்பை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது:-

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் எங்கள் தலைவர் கருணாநிதி. கருணாநிதிக்கு எந்த ஒரு பதவியும் தங்க தாம்பளத்தில் வைத்து கொடுக்கப்படவில்லை. அண்ணாவின் பெயரை எப்போதும் கருணாநிதி உச்சரிப்பார். தனது மறைவிலும் தனக்கான இடத்தை போராடி பெற்றார் எங்கள் தலைவர். அவருக்கு நினைவிடம் அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர்

சபாநாயகர் அப்பாவு:- அனைவரின் கருத்துகளையும் காது கொடுத்து கேட்கக்கூடிய தலைவர் கருணாநிதி. என் போன்றவர்கள் இந்த இடத்தில் அமருவதற்கும் காரணமாக இருந்தவர் கருணாநிதி. அந்த வகையில் இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அவையை நடத்துவதில் எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.

இதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோரும் பாராட்டி பேசினர்.

Next Story