கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: விசாரணை நடத்த பா.ஜனதா குழு அமைப்பு அண்ணாமலை அறிக்கை


கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: விசாரணை நடத்த பா.ஜனதா குழு அமைப்பு அண்ணாமலை அறிக்கை
x
தினத்தந்தி 24 Aug 2021 11:56 PM GMT (Updated: 24 Aug 2021 11:56 PM GMT)

கே.டி.ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த பா.ஜனதா மாநிலச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கே.டி.ராகவன் சர்ச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்துப்பேசியது உண்மை.

அவர் 2-ம் முறை வலியுறுத்தியபோதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன். அதன்பின் 3-வது முறையாக செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்கமுடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் ‘‘செய்து கொள்ளுங்கள்’’ என்று சுருக்கமாக முடித்துவிட்டேன்.

உள்நோக்கம்

கே.டி.ராகவனிடம் இன்று (நேற்று) காலையில் பேசினேன். தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதை தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்தார். தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

அதேபோல மதன் ரவிச்சந்திரன், சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது என்று சொல்லி இருப்பது, அவருக்கு ஏதேனும் ஒரு உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பா.ஜ.க.வில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

விசாரணை குழு

இந்தநிலையில் கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து, சாட்டப்படும் குற்றங்களில், வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story