சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ


சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ
x
தினத்தந்தி 25 Aug 2021 12:00 AM GMT (Updated: 25 Aug 2021 12:00 AM GMT)

பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வீடியோ காட்சி ஒன்று நேற்று வெளியானது. பா.ஜ.க.வை சேர்ந்த ஊடகவியலாளரான மதன் ரவிச்சந்திரன் இந்த வீடியோவை வெளியிட்டார். அதில், ‘வாட்ஸ்-அப்' வீடியோ அழைப்பில் பெண் ஒருவருடன் கே.டி.ராகவன் அரை நிர்வாண நிலையில் ஆபாசமாக பேசுவது போன்றும், பெண்ணுடன் பேசிக்கொண்டே அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபடுவது போன்றும் காட்சிகள் உள்ளன.

கே.டி.ராகவனின் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. இதையடுத்து பலரும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர். கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்து சிக்கப்போவது யார்?

கே.டி.ராகவன் போன்று, 15 தலைவர்கள், பெண் நிர்வாகிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும், அதுதொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பார்த்தால் மேலும் சில தலைவர்களின் குட்டுகள் அம்பலமாகும் என்று தெரிகிறது.

சர்ச்சைக்குரிய இந்த வீடியோ காட்சியின் எதிரொலியாக, தான் வகித்து வந்த கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.

சட்டப்படி சந்திப்பேன்

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, கே.டி.ராகவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும், கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story