காஞ்சீபுரம் உள்பட 6 நகராட்சிகள் தரம் உயர்வு: தாம்பரம் மாநகராட்சி ஆகிறது 28 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக மாற்றம்


காஞ்சீபுரம் உள்பட 6 நகராட்சிகள் தரம் உயர்வு: தாம்பரம் மாநகராட்சி ஆகிறது 28 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக மாற்றம்
x
தினத்தந்தி 25 Aug 2021 12:10 AM GMT (Updated: 25 Aug 2021 12:10 AM GMT)

தமிழகத்தில் காஞ்சீபுரம் உள்பட 6 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சி ஆகிறது. 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பேசினார்கள். தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

நகராட்சிகள் விரிவாக்கம்

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புற தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாக கருதப்படுகிறது.

தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

காஞ்சீபுரம் மாநகராட்சி ஆகிறது

தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளை சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும், நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும்.

மேலும், காஞ்சீபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச்சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

விரிவாக்கம்

திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், தஞ்சை, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூந்தமல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றை சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கணசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும். மேலும், புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல். புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும்.

பதவியில் தொடர்வார்கள்

அவ்வாறு தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகின்ற ஊராட்சிகளில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடிவடைகின்றபோது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Next Story