டீசல் விலை உயர்வு எதிரொலி: காசிமேடு துறைமுகத்தில் இருந்து 20 சதவீத விசைப்படகுகளே மீன்பிடிக்க செல்கின்றன


டீசல் விலை உயர்வு எதிரொலி: காசிமேடு துறைமுகத்தில் இருந்து 20 சதவீத விசைப்படகுகளே மீன்பிடிக்க செல்கின்றன
x
தினத்தந்தி 25 Aug 2021 8:29 PM GMT (Updated: 25 Aug 2021 8:29 PM GMT)

டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பால் காசிமேடு துறைமுகத்தில் இருந்து தற்போது 20 சதவீத விசைப்படகுகளே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன.

சென்னை,

சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் ஒரு லிட்டர் ரூ.66-க்கு விற்பனையானது. இது படிப்படியாக உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை உள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கு ஒரு விசைப்படகுக்கு குறைந்தது 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் மாநில அரசு, மாதத்துக்கு ஆயிரத்து 800 லிட்டர் டீசல் மட்டுமே மானிய விலையில் வழங்குகிறது. மேலும் ஆழ்கடலுக்கு ஒருமுறை மீன்பிடிக்கச் சென்று வர ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை மீனவர்களுக்கு செலவாகிறது.

20 சதவீத படகுகள்

வலையில் அதிகமான அளவு மீன்கள் சிக்கினாலும், டீசல் விலை உள்பட எல்லா செலவுகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், மீனவர்கள் கடனில் சிக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 50 சதவீத விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 30 சதவீத விசைப்படகு உரிமையாளர்கள் கடனில் உள்ளதால், மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வெறும் 20 சதவீத விசைப்படகுகள் மட்டுமே தற்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. டீசல் விலை உயர்வின் காரணமாக மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு, மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் அளவை அதிகரிக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும்

இதுதவிர காசிமேடு துறைமுகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் மீன்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, கொரோனா கட்டுப்பாடுகள் தங்களை கடலில் தள்ளிவிட்டுவிட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் இணைச் செயலாளர் கே.அஞ்சப்பன் கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வு எங்களுடைய வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட்டது. அரசு வழங்கும் மானியம் போதாது. அதனால் தற்போது நாங்கள் சிறிய அளவிலான மீன்களையே பிடிக்க முடியும். அந்த மீன்களை குறைவான விலைக்குத்தான் விற்க முடியும். எனவே டீசல் மானியத்தை அரசு உயர்த்தவேண்டும். அல்லது இழப்பீட்டையாவது தரவேண்டும்’ என்றார்.

Next Story