அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Aug 2021 9:57 PM GMT (Updated: 25 Aug 2021 9:57 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

கூட்டுறவு வங்கிகள்

செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.):- 10 ஆண்டு காலம் கூட்டுறவு துறைக்கு தொடர்ந்து அமைச்சராக இருந்து இருக்கிறேன். எங்கள் ஆட்சியில் எத்தனையோ பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம். விவசாயிகளுக்கான பயிர்கடன் 2011 முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 6 லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 640 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் கொடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் லாபத்தில் இயங்கின. விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:- 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை 10 வங்கிகளை தவிர மற்ற 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின. 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 23 வங்கிகளும் லாபத்தில் இயங்கியது.

அதேபோல, 2001 அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 481 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 475 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கியது. 2006-ல் தி.மு.க. ஆட்சி காலத்தில் 3,900 கூட்டுறவு வங்கிகள் லாபத்தில் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்காக வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. மேலும் விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தோம்.

கடன் தள்ளுபடி

அமைச்சர் எ.வ.வேலு:- உறுப்பினர் செல்லூர் ராஜூ 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தவர். கடந்த காலங்களில் தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தது. இதற்கான அரசாணை இருக்கிறது.

இது குறித்து உங்கள் ஆட்சிக்காலத்தில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச எழுந்தபோது, பேச விட்டீர்களா?. ஆனாலும் எங்கள் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு பதில் சொல்லுங்கள் என்றுதான் கூறுகிறார். குற்றச்சாட்டுகளை நீங்கள் கூறும்போதுதான் நாங்கள் குறுக்கீட்டு பேச வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) :- வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 22 ஆண்டுகளாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி, புதிய உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு பெற்றார். தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

கூட்டுறவு சங்க தேர்தல்

அமைச்சர் ஐ.பெரியசாமி:- அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் யார்? யார்? தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கூட்டுறவு சங்க தேர்தலில் 1,200 சங்கங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, 400 சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. கூட்டுறவு சங்கங்களுளுக்கு பூட்டு போட்டு தானே தேர்தலை நடத்தினீர்கள். எங்கு தேர்தல் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.):- கூட்டுறவு சங்க தேர்தலில் தவறுகள் இருந்தால் அதனை விசாரிக்க குழு அமைக்க மட்டுமே கோர்ட்டு உத்தரவிட்டது. எந்த தேர்தலையும் ரத்து செய்யவில்லை. கூட்டுறவுத்துறையில் 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2 விருதுகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

5 சதவீதம் உயர்த்தி...

அமைச்சர் ஐ.பெரியசாமி: அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செய்த திட்டங்களை பற்றி உறுப்பினர் குறிப்பிடுகிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு துறையில் 4 ஆயிரம் உணவு கிடங்குகள் பயன்படுத்தாமல் காலி இடங்களாக வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் 3 மாதங்களில் 5 லட்சம் டன் நெல் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு தரமான நல்ல அரிசியை வழங்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் உத்தரவுபடி பணிகளை நிறைவேற்றி வருகிறோம்.

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கு அரசு நிர்ணயித்துள்ளது. இதனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நோக்கமாக உள்ளது. ஆகவே இதனை 5 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.):- பெண்கள் அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி அளித்துள்ளீர்கள். இதை அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story