மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியில் 38 லட்சம் டன் மணல் அப்புறப்படுத்த திட்டம்


மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியில் 38 லட்சம் டன் மணல் அப்புறப்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 7:01 PM GMT (Updated: 26 Aug 2021 7:01 PM GMT)

சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் சேவைக்கான 2-ம் கட்ட பணியின்போது சேரும் 38 லட்சம் டன் மணல் மற்றும் குப்பை களை 1 லட்சத்து 51 ஆயிரம் டிப்பர் லாரி நடைகள் மூலம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் முதல் கட்டத்தில் 2 பாதைகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2-ம் கட்டமாக 3, 4 மற்றும் 5-ம் வழித்தடங்களுக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் நடக்கிறது.

3-வது வழித்தடமான மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் பாதையில், 19.1 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் 20 ரெயில் நிலையங்களும், 26.7 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

128 ரெயில் நிலையங்கள்

அதேபோல் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் பாதையில், 10.1 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் 12 ரெயில் நிலையங்களும், 16 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்களும் வர உள்ளன.

அதேபோல், 5-வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் பாதையில், 5.8 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்களும், 41.1 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையில் 42 ரெயில் நிலையங்களும் கட்டப்பட உள்ளன. ஆக மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தூரப்பாதையில் 128 ரெயில் நிலையங்கள் வர உள்ளன.

38 லட்சம் டன் மணல்

ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பாதைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தப்பணியில் 23 சுரங்கப்பாதை தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) பயன்படுத்தப்பட உள்ளது.

சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதைக்கான அஸ்திவாரம் தோண்டும் போது 10.69 மில்லியன் கன மீட்டர் அதாவது 37.75 லட்சம் (38 லட்சம்) டன் மணல் மற்றும் குப்பைகள் மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து சேரும். இவற்றை பணி நடக்கும் இடத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று கொட்டப்பட வேண்டி உள்ளது. இதற்காக 25 டன் டிப்பர் லாரிகள் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரம் நடைகள் மூலம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மணல் மற்றும் குப்பைகளை அடிக்கடி கொண்டு செல்லும் வாகனங்களால் பல நூறு டன் கார்பன் தொடர்பான வாயுக்கள் காற்றில் பரவ வாய்ப்பு உள்ளதால் 32 டன் தூசி வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கையின் படி கட்டுமான காலத்தில் கட்டுமானங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் மூலம் சுமார் 132 டன் கார்பன் மோனாக்சைடு, 6 டன் ஹைட்ரோ கார்பன்கள், 274 டன் நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் 17 ஆயிரம் டன் கார்பன்-டை-ஆக்சைடு உருவாகிறது.

ரெயில் நிலைய அளவு குறைப்பு

முதல் கட்டத்தில் 19 சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்கும்போது, சராசரியாக 35 ஆயிரத்து 314 டன் மண் மற்றும் குப்பைகள் சேர்ந்தன. இவற்றை டிப்பர் லாரிகள் மூலம் 64 ஆயிரம் நடைகளில் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆனால் 2-ம் கட்டத்தில் அமைக்கப்படும் ரெயில் நிலையங்களின் அளவு 25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதல் கட்டத்தில் 45 கிலோ மீட்டர் அமைக்கப்பட்ட பாதை, 2-ம் கட்டத்தில் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு இடையூறு கூடாது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “எது எப்படியோ மாநகரில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மெட்ரோ ரெயில்களின் கட்டுமானங்களை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் முதல் கட்டத்தில் 45 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்து கொள்ளப்பட்டது. அதில் விரிவாக்கத்தில் திருவொற்றியூரில் இன்னும் ரெயில் நிலையம் கட்டி முடிக்கப்படவில்லை. காலதாமத பணியால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு வகைகளில் இடையூறுகள் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 2-வது கட்டத்தை திட்டமிட்ட காலத்தில் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Next Story