குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக பல ஆண்டுகள் சிறைவாசம்: 17 ஆண்டுகள் கழித்து நிரபராதி என பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு


குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக பல ஆண்டுகள் சிறைவாசம்: 17 ஆண்டுகள் கழித்து நிரபராதி என பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 8:27 PM GMT (Updated: 26 Aug 2021 8:27 PM GMT)

தனது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்ணுக்கு, 17 ஆண்டுகள் கழித்து அவர் நிரபராதி என தீர்ப்பு கிடைத்துள்ளது, இந்த வழக்கில் சின்னச்சின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கவில்லை என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை,

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 49). இவர் தனது 1½ வயது குழந்தையை கடந்த 2002-ம் ஆண்டு கிணற்றில் வீசி கொன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட கோர்ட்டு அவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனால் அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டில் அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது விவகாரம் குறித்து தகவல் அறிந்த வக்கீல் தாமஸ் பிராங்க்ளின் சீசர், சகுந்தலாவின் அப்பீல் மனு மீதான ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்தார்.

மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணை

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சகுந்தலாவுக்கு ஜாமீன் அளித்து, அவர் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வந்தது.

அப்போது அவர் சார்பில் வக்கீல் தாமஸ் பிராங்க்ளின் சீசர் ஆஜராகி, “சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த வழக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமான தகவலை அளிக்கிறது. எனவே சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீதான தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

தண்டனை ரத்து

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:-

சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விஷயத்தில் சின்னச்சின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கவில்லை.. சாட்சிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனையை கீழ்க்கோர்ட்டு அளித்துள்ளது. எனவே சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதன்மூலம் 17 ஆண்டுகளாக குற்றவாளியாக கருதப்பட்ட சகுந்தலா நிரபராதி ஆகியுள்ளார்.

Next Story