சிறு, குறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி


சிறு, குறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி
x
தினத்தந்தி 26 Aug 2021 11:01 PM GMT (Updated: 26 Aug 2021 11:01 PM GMT)

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

சென்னை,

மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி உதவிக்கான கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.

தமிழகம் முதலிடம்

முதற்கட்டமாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும், திட்டங்களை நிறைவேற்றியவுடன் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் சிவசுப்பிரமணியன் ராமன் தெரிவித்தார்.

இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக இருந்து வருகிறது.

பல்வேறு திட்டங்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் என்ஜினீயரிங் திட்டம், கோவை மாவட்டத்தில் எலக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், ஓசூரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம், ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் தொழில் பூங்கா, பெருந்துறை. அம்பத்தூர், கோவை மற்றும் தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story