உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டி கமல்ஹாசன் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டி கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2021 11:23 PM GMT (Updated: 26 Aug 2021 11:23 PM GMT)

‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் போட்டியிடும்’, என கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில-மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் துணைத்தலைவர் ஏ.ஜி.மவுரியா, அரசியல் ஆலோசகர் பொன்ராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா மற்றும் மாநில செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து...

உள்ளாட்சி தேர்தல் களப்பணிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வழங்கி உள்ளார்.

குறிப்பாக சட்டமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமைத்த கூட்டணி குறித்து, கூட்டணி தொடர்வதா, வேண்டாமா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் பேச்சு

இந்த கூட்டத்தில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்ய வேண்டும். தேர்தல் கூட்டணி என்பது அந்த நிமிடம் அமையும் கூட்டணியாக இருக்கும். கூட்டணிக்காக வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கவனம் செலுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திட வேண்டும்’’, என்று நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Next Story