மேகதாது அணை விவகாரத்தில் நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது துரைமுருகன் பேச்சு


மேகதாது அணை விவகாரத்தில் நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 27 Aug 2021 11:48 PM GMT (Updated: 27 Aug 2021 11:48 PM GMT)

மேகதாது அணை விவகாரத்தில் நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது என்று துரைமுருகன் பேசினார்.

சென்னை,

சட்டசபை நேற்று காலை கூடியதும் மேகதாது பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), எம்.ஆர்.காந்தி (பா.ஜ.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:-

காவிரி பிரச்சினையில் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தில்தான் உள்ளோம். எனவே முதல்-அமைச்சர் அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

வீழ்த்த முடியாது

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்:- கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்குள்ளவர்கள் கட்சி வித்தியாசம் இன்றி ஒரே மாதிரியாக பேசுகிறார்கள். கேரளாவிலும் அப்படித்தான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வித்தியாசம் காணப்பட்டது. அதெல்லாம் இப்போது இல்லை. இந்த விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே எண்ணம் இருக்கிறது.

மற்ற பிரச்சினைகளில் வித்தியாசம் இருந்தாலும், இந்த பிரச்சினையை பொறுத்தவரையில் செங்கோட்டையன் சொன்னது போல், இரு மொழி கொள்கையிலும், இந்தியை எதிர்ப்பதிலும், காவிரி பிரச்சினையிலும் நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம். பிரதமரையும் நம்முடைய முதல்-அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

திட்டவட்டமாக எடுத்து வைப்போம்

அவர்கள் நம்மிடம் உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த வாரம் காவிரி ஆணைய குழு கூடுகிறது. அங்கே இந்த பிரச்சினை குறித்து கர்நாடகா விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அங்கே பேச முடியாது, பேசக்கூடாது என்பது தமிழகத்தின் வாதம். எனவே எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் கொள்கை, உரிமையை திட்டவட்டமாக எடுத்துவைப்போம். எதை மறுக்க வேண்டுமோ, அதை மறுப்போம், வாதாட வேண்டிய இடத்தில் வாதாடுவோம்.

Next Story