நெடுஞ்சாலை பணிகளில் ‘பேக்கேஜ்' டெண்டர் முறை ரத்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு


நெடுஞ்சாலை பணிகளில் ‘பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 11:53 PM GMT (Updated: 27 Aug 2021 11:53 PM GMT)

நெடுஞ்சாலை பணிகளில் ‘பேக்கேஜ்' டெண்டர் முறை ரத்து செய்யப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் எழிலரசன் (காஞ்சீபுரம்) பேசினார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

‘பேக்கேஜ்’ டெண்டர் முறை

உறுப்பினர் எழிலரசன்:- கிராம சாலைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். நெடுஞ்சாலை பணிகள் ‘பேக்கேஜ்' டெண்டர் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பணிகள் ஒருவரிடமே கொடுக்கப்படுகிறது. பணிகளும் தாமதமாகின்றன. சாலைகளும் தரமாக இல்லை. அந்த முறையை மாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- கடந்த காலத்தில் கிராம சாலைகளின் தரம் உயர்த்தப்படவில்லை என்று உறுப்பினர் கூறினார். 8 ஆயிரம் கி.மீ. நீள கிராம சாலைகள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 6 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன.

சிறந்த திட்டம்

அதேபோல், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை இ-டெண்டர் மூலம் ‘பேக்கேஜ்' முறையில் கொடுப்பது சிறந்த திட்டமாகும். 5 ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்தவர்கள் சாலையை போட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், உறுப்பினர் இங்கே குற்றச்சாட்டாக சொல்கிறார். ‘இ-டெண்டர்’ முறையில் யார் வேண்டும் என்றாலும் கலந்துகொள்ளலாம். முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. ஆனால், முன்னாள் அரசு (அ.தி.மு.க.) மீது குற்றம் சாட்ட பார்க்கிறார்கள்.

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு:- 2014-15-ம் நிதியாண்டில் ‘பேக்கேஜ்' டெண்டர் முறை கொண்டுவரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் என்ற பெயரில் ஒருவருக்கே பணி மொத்தமாக வழங்கப்பட்டது. பணிகளை பிரித்து கொடுத்தால்தான் வேகமாக பணிகளை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலத்தில் இதைத்தான் நாங்கள் சொன்னோம். ஆனால், ‘பேக்கேஜ்' முறையில் டெண்டர் எடுப்பவர்கள் மீண்டும் அந்தப் பணிகளை பலருக்கு பிரித்து வழங்குகிறார்கள்.

கைவிடப்படுகிறது

யார் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. போடப்படும் சாலைகளும் தரமில்லை. எனவே, ‘பேக்கேஜ்' டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டது. சாலை பணிகளை அரசு மேற்கொள்ளும்போதும், ‘பேக்கேஜ்' முறையில் செய்யும்போதும் ஒரு கி.மீ. தூரத்திற்கு ரூ.50 ஆயிரம் வித்தியாசம் ஏற்படுகிறது. இந்த முறை டெண்டர் நடைமுறையால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பி.பி.எம்.ஜி. என்று சொல்லப்படும் ‘பேக்கேஜ்' டெண்டர் முறை இன்று முதல் கைவிடப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- தகுதியானவர்கள் எங்கு வேண்டுமானாலும் 7இ-டெண்டர்’ போடலாம்.

பணி கிடைப்பதில்லை

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்:- 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் ‘பேக்கேஜ்' டெண்டர் முறை கொண்டுவரப்பட்டது. பிறகு, 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அது நீக்கப்பட்டது. மீண்டும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ‘பேக்கேஜ்' டெண்டர் முறை கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- இ-டெண்டர் முறை இப்போதுதான் கொண்டுவரப்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு:- டெண்டர் எடுக்க தகுதியான ஆள் அந்த மாவட்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. அவர்களுக்கு பணிகிடைத்தால், சாலை பராமரிப்பு பணியை பார்த்துக்கொள்வார்கள்.

அரசுக்கு ரூ.1886.40 கோடி இழப்பு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- டெண்டர் இப்படித்தான் போட வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. அப்படி கொண்டுவர வேண்டும் என்றால் தனிச்சட்டம் போட வேண்டும்.

அமைச்சர் எ.வ.வேலு:- பெரிய தொகைக்கு டெண்டர் போடும்போது, இங்குள்ள சிறிய ஒப்பந்ததாரர்களால், அதில் பங்கேற்க முடியவில்லை. கூடுவாஞ்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான முதற்கட்ட வெளிவட்ட சாலை 2009-10-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1,081 கோடியில் தொடங்கப்பட்டது. பிறகு, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 18-9-2011 அன்று 2-வது கட்ட வெளிவட்ட சாலை ரூ.1,075 கோடியில் தொடங்கப்பட்டது. இதில் அரசு 20 சதவீத பங்கு நிதியை வழங்கும், மீதி தொகையை குறிப்பிட்ட நிறுவனம் போட்டு பணிகளை முடிக்கும்.

பிறகு, அரசு சுங்கக்கட்டணம் மூலம் அந்த நிறுவனத்திற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பணம் வழங்க வேண்டும். தற்போது, 2 பணிகளுமே முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தி.மு.க. ஆட்சி காலத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ.63.13 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.119.97 கோடி வழங்கப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.1886.40 கோடி இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story