3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் நிறைவேறியது


3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 28 Aug 2021 11:52 PM GMT (Updated: 28 Aug 2021 11:52 PM GMT)

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்த தீர்மானம் சட்டசபையில் நேற்று நிறைவேறியது.

சென்னை, 

மத்திய அரசின்3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபை நேற்று காலை கூடியதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளை காப்பாற்றுவதற்காகவும் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசால் சொல்லப்படும்3 வேளாண் சட்டங்களும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை, வேளாண்மையை அழிப்பதாக இருக்கிறது என்றே விவசாயிகள் சொல்லி வருகிறார்கள்.

அதனை உணர்த்துவதற்காக கடந்த ஆண்டு முதல் போராட்டத்தையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறைக்கு எந்த மாநில அரசுடனும் ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. அதனால்தான் அந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு, செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை இயற்றியிருக்கிறது.

விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம்-2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம்-2020 ஆகிய இந்த 3 சட்டங்களுமே வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும் எதிரானவைதான்.

விவசாயிகள் இந்த நாட்டில் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்; நெற்றி வியர்வை சிந்தி, தாம் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை என்பதை குறைந்தபட்சம் வாய் வார்த்தைக்கு கூட பேசாத சட்டங்கள்தான் இந்த 3 சட்டங்களும்.

வேளாண் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிப சட்டமானது, பல ஆண்டுகளாக விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் பெரும்பங்காற்றி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் சந்தைப்பகுதியை உள்நோக்கத்துடன் குறைக்கிறது. இந்த சட்டத்தினால் மாநில விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பது உறுதியாகிறது.

இரண்டாவதாக, “விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம், 2020 என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சட்டமானது, தனியார் கூட்டாண்மை நிறுவனங்களை மாநில அரசின் கண்காணிப்பிலிருந்து விடுவிப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது நன்கு உறுதியாகின்றது. இந்த சட்டத்தினால், லாபகரமான விலையை விவசாயிகள் கேட்டுப்பெற முடியாத நிலை உருவாகும்.

மூன்றாவதாக, “அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், 2020” என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது; இதன்படி, விளைபொருட்களின் சேமிப்பு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும், விளைபொருட்களுக்கு உரிய விலை உழவர்களுக்கு கிடைக்காது, ஆனால் சந்தையில் செயற்கையான விலையேற்றம் ஏற்படும், இந்த திருத்தச்சட்டம் மூலம் விவசாயிகள் எவ்வித பயனும் அடையப்போவதில்லை.

இப்படி இந்த 3 சட்டங்களுமே வேளாண்மைக்கு எதிரானதாகவும், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு பாதகமானதாகவும் அமைந்திருக்கின்றன. எனவே, இந்த அரசு கண்ணில் வைத்து போற்றும் நம் விவசாயிகளின் நலன்களை என்றென்றும் பாதுகாத்திடவும், அவர்தம் வாழ்வு செழிக்கவும், வேளாண்மை என்பது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடாமல் தடுக்கவும், அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமைந்துள்ள மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, ஒருமனதாக இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2020-ம் ஆண்டு, ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கி, தற்போது வரை 385-வது நாளாக விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, தொடர்ந்து கடுமையாக போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அறவழி போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் இந்த அரசு இந்த தீர்மானத்தை முன்மொழிகிறது:

“வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, வேளாண்மை துறையின் பெயரினை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டு வந்த 3 சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை மத்திய அரசினால் ரத்து செய்யப்படவேண்டும் என இந்த சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்று அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த குரலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

துரைமுருகன்:- முதல்-அமைச்சர் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த தீர்மானத்தை, அ.தி.மு.க., பா.ஜ.க.வும் வெளிநடப்பு செய்து விட்டார்கள். ஆனால், அவையில் இருக்கிறவர்கள், ஒவ்வொருவரிடமும் நீங்கள் (சபாநாயகர்) இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்க வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் குரல் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Next Story