சென்னையில் 112 கல்லூரிகளில் 1-ந்தேதி தடுப்பூசி முகாம்: மாணவர்கள், பேராசிரியர்களுக்காக மாநகராட்சி ஏற்பாடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Aug 2021 12:26 AM GMT (Updated: 29 Aug 2021 12:26 AM GMT)

சென்னையில் 112 கல்லூரிகளில் 1-ந்தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னையில் இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 பேர் சென்னையில் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 26 லட்சத்து 86 ஆயிரத்து 366 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 55 ஆயிரத்து 956 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட்டத்தில் 4 ஆயிரத்து 674 பேர் முதல் தவணையும், 1,565 பேர் 2-வது தவணை என மொத்தம் 6 ஆயிரத்து 239 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 ஆயிரத்து 328 பள்ளி ஆசிரியர்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்தவகையில் 2 ஆயிரத்து 999 பேர் முதல் தவணையும், 2 ஆயிரத்து 14 பேர் 2-வது தவணையும் போட்டுக்கொண்டுள்ளனர். 2 ஆயிரத்து 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களில் 1,688 பேருக்கு முதல் தவணையும், 759 பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், குடிசைப்பகுதிகளில் தினசரி 45 சிறப்பு முகாம்கள் மூலம் கடந்த 2 வாரத்தில் 43 ஆயிரத்து 112 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 577 பேரில் 10 ஆயிரத்து 903 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2 ஆயிரத்து 577 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் மற்றும் கடந்த 26-ந்தேதி 200 வார்களில் நடைபெற்ற 400 சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 865 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் சென்னையில் 112 கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போடாத மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரும் போது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை கொண்டு வர வேண்டும் என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


Next Story