ஆசிரியர், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஆசிரியர், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:50 PM GMT (Updated: 29 Aug 2021 7:50 PM GMT)

ஆசிரியர், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாதது அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது. நிதி நெருக்கடி என்ற ஒற்றை காரணத்தை காட்டி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுப்பது நியாயம் அல்ல.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற நமது அரசு மருத்துவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி மக்களை காப்பாற்றிய மருத்துவர்களின் உரிமைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவது தான் மக்கள் நல அரசுக்கு அடையாளம் ஆகும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போதைய முதல்-அமைச்சருக்கு உடன்பாடான ஒன்று தான். தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அசைக்க முடியாத அங்கமாக திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம் ஆகும். இதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story