காற்றில் பறந்த சமூக இடைவெளி: மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை


காற்றில் பறந்த சமூக இடைவெளி: மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை
x
தினத்தந்தி 29 Aug 2021 11:40 PM GMT (Updated: 29 Aug 2021 11:40 PM GMT)

சென்னை மெரினா கடற்கரையில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் நேற்று கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாபரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு வருகிற செப்டம்பர் 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பின்போது அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக தமிழகத்தில் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டன.

அந்தவகையில் உலக புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரை ஏறக்குறைய 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதுவரை அதிகாலை வேளையில் நடைபயிற்சிக்காக மட்டுமே திறக்கப்பட்டு வந்த கடற்கரை, மீண்டும் பொது பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் கூட்டம்

இதனைத்தொடர்ந்து மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவுக்கு கடற்கரைகளில் கூட்டம் இருந்து வருகிறது. அந்தவகையில் விடுமுறை நாளான நேற்று மெரினாவில் கடற்கரை பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி தந்தன. அந்தளவு மக்கள் எண்ணிக்கை இருந்தது.

அதேவேளை சமூக இடைவெளி காற்றில் பறந்தது போல, மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரையில் உலா வந்தது அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. ஒரு சிலர் முக கவசம் இல்லாமலும் சுற்றி திரிந்தது தான் வேதனையின் உச்சம்.

பொது இடங்களில்...

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கொரோனா 3-வது அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம். ஆனால் மக்கள் இப்படி அபாயத்தை மறந்து சுற்றி திரிவது வேதனை தருகிறது. சொல்லப்போனால் மெரினா கடற்கரை, நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மீண்டும் மூடப்பட்டால் தான் பாதிப்பின் தீவிரத்தை குறைக்கமுடியும் என்பது போலத்தான் இருக்கிறது. இனியாவது மக்கள் சமூக பொறுப்பை உணர்ந்து பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்’’ என்றனர்.

இதேபோல பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் உள்பட இதர கடற்கரைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.



Next Story