9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் கையேடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு


9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் கையேடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு
x
தினத்தந்தி 30 Aug 2021 9:53 PM GMT (Updated: 30 Aug 2021 9:53 PM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில், அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக கடந்த 5-ந் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேட்பாளர் கையேட்டை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் வேட்பாளர்களின் தகுதி, தகுதியின்மை, தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய வேண்டாதவை, சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்குச்சாவடி முகவர்களின் கடமைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

4 வகையான வாய்ப்புகள்

அதன் விவரம் வருமாறு:-

ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 4 வகையான வாய்ப்புகள் உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு தேர்தலிலும் (உறுப்பினர் பதவியிடத்திற்கான தேர்தல், தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல்) குறிப்பிட்ட விகிதத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்த விவரங்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும் தேர்தல் அறிவிப்பில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தகுதி-தகுதியின்மை

தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி என்னவென்றால், எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

அதே போன்று, ஒருவர் கோர்ட்டால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பின் அந்த தண்டனை அல்லது தீர்ப்பானது அபராதம் மட்டும் இருப்பின், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் 37 பக்க வேட்பாளர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Story