பொதிகை தொலைக்காட்சி சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் எல்.முருகன் பேச்சு


பொதிகை தொலைக்காட்சி சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2021 10:10 PM GMT (Updated: 30 Aug 2021 10:10 PM GMT)

பொதிகை தொலைக்காட்சி் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.

சென்னை,

சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி எல்.முருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்ய வந்திருந்த மத்திய மந்திரி எல்.முருகனை, பொதிகை தொலைக்காட்சி துணை தலைமை இயக்குனர் கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் சையது ரபீக் பாஷா ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

சுதந்திரத்தின் 75-ம் ஆண்டை கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திரப்போரில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம் ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களது செய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள்

மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ஊடக அதிகாரிகள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும்.

குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி, கோதுமை திட்டத்தின் பயன்கள், பிரதமரின் ஜன்தன் யோஜனா, மக்கள் மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம் மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்று நட்ட மந்திரி

இந்த ஆய்வில் தொலைக்காட்சியின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து, மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் விளக்கப்பட்டதோடு, அதுகுறித்த காணொலியும் ஒளிபரப்பப்பட்டது. ஆய்வை முடித்த பின்னர், அகில இந்திய வானொலி மற்றும் சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (என்ஜினீயரிங்) அலுவலக வளாகத்தில் மத்திய மந்திரி மரக்கன்றை நட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சி அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தனர்.

Next Story