தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என வழக்கு


தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என வழக்கு
x
தினத்தந்தி 30 Aug 2021 11:55 PM GMT (Updated: 30 Aug 2021 11:55 PM GMT)

தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமிநாதன், சதன் திருமலைக்குமார், ரகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்கள் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதனால், இந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8 எம்.எல்.ஏ.க்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருத முடியும்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது. இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்கக்கூடாது. சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்கக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story