சென்னையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Aug 2021 12:19 AM GMT (Updated: 31 Aug 2021 12:19 AM GMT)

சென்னையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழா ஆகியவை சென்னை டாக்டர் பெசன்ட் சாலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் நேற்று நடந்தது.

அப்போது மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை விளக்கும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை கொண்ட குடியிருப்பு போன்றும் வடிவமைக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் ஓட்டு வீடுகள், கான்கிரீட் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எவ்வாறு உருவாக்குதல் என்பது தொடர்பான விவரங்கள், வரைபடங்கள், தண்ணீரை குறைவாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊர்வலம்

இந்த வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், கையேடுகள் போன்றவை பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக 400 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி மையத்துக்கு 5 மகளிர் சுய உதவி குழுவினர் வீதம் 400 உதவி மையங்களில் 2 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதன்மூலம் சென்னை மாநகராட்சியில் உள்ள 35 ஆயிரம் தெருக்களுக்கு நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினர் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியபடி பாரம்பரிய இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.

தன்னார்வலர்கள் குழு

இந்த ஊர்வலத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் குடியிருப்புகளின் தன்மை, கிணறு வகைகள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு விவரங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி குடிநீர், கழிவுநீர் பற்றிய குறைகள் மற்றும் நீரில் உள்ள திடப்பொருட்களின் அளவு ஆகியவற்றை தெருக்கள் வாரியாக கேட்டறிந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கென்று தண்ணீர் தன்னார்வலர்கள் குழு மகளிர் சுய உதவி குழுவினரை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை செய்வார்கள்.

துண்டு பிரசுரம்

இந்த நிகழ்ச்சியின் போது, வீடுகளுக்கு கைபம்புகள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

விழா நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

பின்னர், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொரோனா நிதி

முன்னதாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் வழங்கிய கொரோனா நிவாரண நிதி 34 லட்சத்து 74 ஆயிரத்து 320 ரூபாயை விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சா.விஜயராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story