அடையாள அட்டை, சீருடை அணிந்து சென்றால் அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவசம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்


அடையாள அட்டை, சீருடை அணிந்து சென்றால் அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவசம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 31 Aug 2021 2:27 AM GMT (Updated: 31 Aug 2021 2:27 AM GMT)

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடையுடன், அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நாளை (புதன்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. இலவச பயண அட்டை வழங்கும் வரை அரசு பஸ்களில் மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து, சீருடையுடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி (நாளை) முதல் திறக்கப்பட உள்ளது.

எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவ-மாணவிகளுக்கான கட்டணமில்லா பஸ் பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பஸ்களில் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து படிக்கும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோன்று, அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, கண்டக்டர்களிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story