கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் - கலெக்டர் சமீரன் அறிவிப்பு


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் - கலெக்டர் சமீரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 3:16 AM GMT (Updated: 31 Aug 2021 3:16 AM GMT)

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை (புதன்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன்படி கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, என்.பி. இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை, அவினாசி ரோட்டில் ஹோப்காலேஜ் சிக்னல், காளப்பட்டி ரோடு, டி.பி.ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, திருவேங்கட சாமி ரோடு, ஆரோக்கியசாமி ரோடு, சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பஸ் நிலையம், துடியலூர் மார்க்கெட், பீளமேடு ரொட்டி கடை மைதானம், ஆவாரம்பாளையம் சந்திப்பு, காந்திமாநகர், பாரதிநகர், பி.என்.பாளையம் சந்திப்பு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ்வீதி, சுக்கிரவாரபேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, சல்லீவன் ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூட்டத் தை கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பால், மருந்த கம், காய்கறி கடைகள் தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப் படுகிறது. 

கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து பூங்காக்கள் மற்றும் வணிகவளாகங்களில் (மால்கள்) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரி கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். கோவை மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.

இதை சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்கும். உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் இயங்கும், அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தையும் இயங்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கான விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில் அங்கிருந்து வரும் மாணவ-மாணவிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வர வேண்டும் இதை அந்தந்த கல்வி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து கோவைக்கு மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்ல அனுமதியில்லை.

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 10 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story