சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் பலி - கணவர் கைது


சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் பலி - கணவர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 3:56 AM GMT (Updated: 31 Aug 2021 3:56 AM GMT)

சேலத்தில் குடும்பத்தகராறில் மனைவி மீது திராவகம் வீசி கொன்ற கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 52). இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியை சேர்ந்த ரேவதி (47) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் தகராறின் போது மனைவியை ஏசுதாஸ் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவன் ஏசுதாஸ் மீது கொடுத்த புகார் தொடர்பாக நேற்று ரேவதி, தனது தாய் ஆராயி (65) என்பவருடன் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்தார்.

இதையடுத்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மாலை 5.30 மணி அளவில் தாயுடன், ரேவதி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் பஸ்சுக்காக ராசிபுரம் வழித்தடத்தில் நின்று கொண்டிருந்தனர். மனைவி சேலம் வந்திருப்பதை அறிந்த ஏசுதாஸ் சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

மேலும் அவர், 5 லிட்டர் கேனில் மறைத்து வைத்து கொண்டு வந்த திராவகத்தை எடுத்து திடீரென மனைவி ரேவதியின் உடலில் ஊற்றினார். இதனால் உடல் வெந்தநிலையில் படுகாயத்துடன் வலியால் அவர் பஸ் நிலையத்துக்குள் அங்கும், இங்குமாக ஓடி அலறி துடித்தார். இதையடுத்து ஏசுதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை பார்த்து பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ரேவதி மீது திராவகம் வீசும் போது அவருடைய தாய் ஆராயி மீது பட்டதில் அவரும் காயம் அடைந்தார். பின்னர் ரேவதி, ஆராயி ஆகியோரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இவர்களில் ரேவதி சிகிச்சை பலனின்றி இரவில் இறந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஏசுதாசை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், இன்று காலை பெண்ணின் கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பெண்ணின் தாய்க்கு சேலம் அரசு மருத்துவமனையில்  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story