விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை எதிரொலி: சிலை தயாரிப்பாளர்கள் திடீர் சாலை மறியல்


விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை எதிரொலி: சிலை தயாரிப்பாளர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:04 PM GMT (Updated: 31 Aug 2021 8:04 PM GMT)

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து சிலை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேற்று சட்டசபை நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களினால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்துவிட்டது. எனவே தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பண்டிகை கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, பொது இடங்களில் விழாவை கொண்டாடுவது ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, அமைப்பாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனி நபர்களாக தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, அதை தனிநபராக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

திடீர் சாலை மறியல்

இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தின் பிரதான வாயில் முன்பு, வாலாஜா சாலையில், தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர் ஆண்களும், பெண்களுமாக 200 பேர் பஸ்சில் வந்திறங்கினர்.

அவர்கள் கையில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேனர்கள் வைத்திருந்தனர். திடீரென்று வாலாஜா சாலையின் ஒரு பக்கத்தை மறித்து நின்று ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பரபரப்பு

அங்கு செல்லும் வாகனங்களை வேறு வழியில் போலீசார் திருப்பி விட்டனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை அழைத்து போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலை உடனடியாக கைவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஆனாலும் அவர்கள் சாலையை மறித்து நின்றுகொண்டிருந்ததால் 4 போலீஸ் வேன்களை வரவழைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சாலை மறியல் போராட்டம் நடந்ததால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

கடன் வாங்கி முதலீடு

இந்த போராட்டம் பற்றி சங்கத்தின் மாநில ஆலோசகர் ராமலிங்கம் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தடைகளை மத்திய, மாநில அரசுகள் ஓராண்டிற்கும் மேலாக அறிவித்து வருகின்றன. இதனால் விநாயகர் சிலைகளை தயாரிப்பது, விற்பனை செய்வதற்கு தடையும், இடையூறும் ஏற்படுகிறது.

இதனால் எங்களின் தொழிலும், பொருளாதாரமும் முடங்கிப்போய்விட்டன. இதில் பலரும் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். ஆனால் தொழில் செய்ய முடியாத நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானத்தை சந்திக்கிறோம். எங்களின் வருவாய் இழப்பை சரிசெய்ய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

சாதாரண முறையில்....

எங்கள் தொழில்கூடங்களை சீல் வைக்கக்கூடாது. மிகநலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்படுத்தித்தர வேண்டும். சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் உற்பத்தி செய்யும் பொம்மைகளை அரசே நியாயமான முறையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதாரண முறையில் விநாயகர் சதுர்த்தியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story