தமிழகத்தில் 1.25 லட்சம் தனியார் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி அறிவிப்பு


தமிழகத்தில் 1.25 லட்சம் தனியார் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 9:05 PM GMT (Updated: 31 Aug 2021 9:05 PM GMT)

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட உள்ளது என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன், மாநில அமைப்பாளர் பக்தவத்சலன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 38 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பான முறையில் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பொது இடத்தில் வைத்து வழிபட அனுமதி கிடையாது என்று அரசு அறிவித்து உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிறப்பித்த உத்தரவில், வீட்டு வாசலில் விநாயகர் சிலைகளை வைக்கலாம், 4 அல்லது 5 பேர் மிகாமல் எடுத்து சென்று கரைக்கலாம் என்று கூறி இருந்தது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தினசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு தினசரி 1,500 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

வீட்டு வாசல், தனியார் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கலாம் என்று கடந்த ஆண்டு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லாததால் இந்த ஆண்டும் அந்த உத்தரவு பொருந்தும். எனவே சட்டப்படி வழக்கம் போல் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுபடி நடத்துவதில் அரசு தலையிட முடியாது.

சாமியிடம் முறையீடு

டாஸ்மாக் திறந்திருக்கலாம், மால், சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் போகலாம், பஸ் எல்லாம் ஓடலாம், எல்லா இடங்களுக்கும் மக்கள் போகலாம், வரலாம்.

ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால் மட்டும் கொரோனா வரும், பரவும் என்று சொன்னால், எந்த காரணத்தை கொண்டும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை (வியாழக்கிழமை) இந்துக்கள் சென்று சாமியை முறையிட உள்ளனர்.

எல்லாமே விநாயகர் தான்

எங்களை பொறுத்த வரையில் எந்த அரசாங்கம், யார் முதல்-அமைச்சர் என்று பார்ப்பதில்லை. இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே யார் வந்து நின்றாலும் எதிர்ப்போம்.

எங்களுக்கு எல்லாமே விநாயகர் தான். கொரோனா என்பதால் கடந்த ஆண்டு பொது இடங்களுக்கு பதிலாக தனியார் இடங்களில் வைத்து பூஜை செய்தோம். இந்த ஆண்டும் சென்னையில் ஆயிரம் இடங்களிலும் தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று, கொரோனா நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். சிலைகள் கரைப்பது, ஊர்வலம் செல்வது குறித்து இன்னும் பேசப்படவில்லை. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் வருகிற 10, 11, 12-ந்தேதிகளில் விழா நடத்த கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story