கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல்: வீட்டில் புகுந்து ரவுடி சரமாரி வெட்டிக்கொலை


கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல்: வீட்டில் புகுந்து ரவுடி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2021 9:14 PM GMT (Updated: 31 Aug 2021 9:14 PM GMT)

கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து ரவுடியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பேட்டை சபாபதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 29). ரவுடியான இவர் மீது மடிப்பாக்கம், பல்லாவரம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர், கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுப்பட மாட்டேன் என கூறி உள்ளார்.

இவர் தனது தாய் சுந்தரி (58) என்பவருடன் வசித்து வந்த நிலையில், பழவந்தாங்கல் போலீஸ் நிலைய வழக்கு தொடர்பாக ராமசந்திரன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நேற்று பகல் வீட்டிற்கு வந்தார்.

சரமாரி வெட்டு

அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டில் புகுந்து அங்கிருந்த ராமசந்திரனை அரிவாள் மற்றும் பட்டா கத்தியால் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினர். அப்போது ராமசந்திரனின் அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்த தாய் சுந்தரி ஓடி வந்து மகனை வெட்டுவதை தடுத்து காப்பற்ற முயன்றார்.

உடனே அந்த கும்பல் சுந்திரி கையிலும் வெட்டினர். ராமசந்திரன் இறந்துவிட்டாரா? என்பதை உறுதி செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இது பற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்டிரூபன், பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் நசீர் அகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தனிப்படை போலீசார்

வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரியை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ராமசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி அப்பு என்ற வசந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அப்பு உள்ளிட்ட கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் கொண்ட போலீசார் அமைக்கப்பட்டு உள்ளது. பட்டப்பகலில் வீடு புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story