தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதத்தில் அதிகபட்சமாக 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதத்தில் அதிகபட்சமாக 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன
x
தினத்தந்தி 31 Aug 2021 11:20 PM GMT (Updated: 31 Aug 2021 11:20 PM GMT)

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் பொதுமக்கள் தயக்கம் காட்டிய நிலையில், பின்னர் தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக படிப்படியாக தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் தயக்கத்தால் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அதிகளவில் தடுப்பூசிகள் வீணாகின. இந்த வீணான தடுப்பூசிகளை சரிக்கட்டும் வகையில், தமிழக அரசு பல புதிய யுக்திகளை கையாண்டு, வந்த தடுப்பூசிகளை விட அதிகளவில் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. தமிழக அரசின் இந்த செயல்பாடுகளால், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக தடுப்பூசிகளை தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதம் முதல் அனுப்பி வருகிறது.

அதிகபட்சமாக...

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் தினசரி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மத்திய அரசும் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருவதால், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஆகஸ்டு மாதத்தில் மட்டும், நேற்று முன்தினம் வரை 85 லட்சத்து 91 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.

மேலும், இதுவரை தமிழகத்தில் மொத்தமாக நேற்று முன்தினம் வரை 2.99 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அதில் 2.38 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 61 லட்சம் 2-ம் தவணை தடுப்பூசியும் ஆகும்.

இந்தநிலையில் தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் மட்டும் 1.04 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Next Story