தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பெயர் மாற்றம்


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 1 Sep 2021 9:07 PM GMT (Updated: 1 Sep 2021 9:07 PM GMT)

குடிசை மாற்று வாரியம் இனிமேல் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரிலே அழைக்கப்படும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக சிந்தித்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அந்த மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கினார். அதன்மூலமாக, பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்தார்.

அன்றைக்கு மத்தியிலே மந்திரியாக இருந்த ‘பாபுஜி’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாபு ஜெகஜீவன்ராம், அந்த திட்டத்தை பற்றி குறிப்பிட்டு பாராட்டி, புகழ்ந்து பேசியிருக்கிறார். மேலும், இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அவரது எண்ணத்தையும் அன்றைக்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார். அந்தளவிற்கு இந்த குடிசை மாற்று வாரியம் மிகச்சிறப்பாக தன்னுடைய கடமையை செய்திருக்கிறது, செய்து கொண்டு வருகிறது.

பெயர் மாற்றம்

ஏழை-எளிய மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வாரியம், இனிமேல் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரிலே அழைக்கப்படும். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story