நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்


நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 2 Sep 2021 8:14 PM GMT (Updated: 2 Sep 2021 8:14 PM GMT)

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிவக்குமார் (வயது 32) என்பவருக்கு சொந்தமான படகில் ஆறுகாட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்த சின்னத்தம்பி(72), சிவா(33), திருமால்(30), வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த விவேக்(34) ஆகிய 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இரவு 10 மணியளவில் இவர்களது படகு அருகே இரண்டு படகு வந்தது. அந்த படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர்.

ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை

பின்னர் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு பைப்களுடன் ஏறி மிரட்டியுள்ளனர். அப்போது மீனவர் சிவா ஏதோ கூறியுள்ளார். உடனே அவரை கடலில் குதிக்குமாறு இலங்கை கடற்கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி அவர் கடலில் குதித்து வலைகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் இருந்த பொருட்களான வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி, இன்வெர்ட்டர், செல்போன் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தாங்கள் வந்த படகில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர்.

போலீசில் புகார்

அவர்கள் சென்ற பிறகு கடலிலில் மிதந்து கொண்டு இருந்த சிவா படகிற்கு திரும்பி வந்தார். பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு நேற்று வந்து சேர்ந்தனர்.

இதுகுறித்து படகு உரிமையாளர் சிவக்குமார் வேதாரண்யம் கடலோர காவல் படை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story