பிளாஸ்டிக் தடையை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு


பிளாஸ்டிக் தடையை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
x
தினத்தந்தி 3 Sep 2021 11:40 PM GMT (Updated: 3 Sep 2021 11:40 PM GMT)

பிளாஸ்டிக் தடையை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்குப் பிறகு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதில் அளித்து பேசியதாவது:-

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தில் 2021 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலம் சிக்கலான காலம் என்று சொல்லப்படுகிறது. 0.3 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதனால், கடும் வறட்சி, 3 மாத மழை ஒரே நாளில் பெய்வது, இடி-மின்னல் அதிகமாக ஏற்படுவது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் கொண்டு, காலநிலை மாற்றம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். சென்னை மாநகரம் உலகில் உள்ள 100 நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. காலநிலை மாற்றத்துக்கு தாக்குப்பிடிக்கும் நகரம் சென்னை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. அதை மீட்டெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஒவ்வொருவரின் வாழ்நாள் அளவும் குறைகிறது. நதிகள் புனிதமானவை. அதில் தயவுசெய்து கழிவுகளை கலக்காதீர்கள்.

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக வேண்டும். இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மரங்கள்தான் நம்மிடம் இருந்து கார்பன்-டையாக்சைடை எடுத்துக்கொண்டு, நாம் சுவாசிக்க ஆக்சிஜனை வழங்குகின்றன. எனவே, நாட்டு மரங்களை நடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையின் அறிவிப்புகள் வருமாறு:-

ரூ.20 கோடியில் பசுமை கட்டிடம்

சுற்றுச்சூழல் துறை சிறந்த வகையில் செயல்படும்விதமாக உரிய தொழில் நுட்பங்களுடன்கூடிய பசுமைக் கட்டிடம் ரூ.20 கோடி செலவில் கட்டப்படும். புதிய பசுமைத் திட்டங்களை கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், ‘முதல்-அமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை நிறுவனம், நீலக்கொடி திட்டத்தின்கீழ், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையை தேர்வு செய்து பரிசோதனை திட்ட அளவில், அழகியல் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், 2021-2022-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ஒரு கடற்கரைக்கு ரூ.10 கோடி வீதம், இரு கடற்கரைக்கு ரூ.20 கோடி செலவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மூலம் கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், 5 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவில் பல கடற்கரைகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பசுமை முதன்மையாளர் விருது

தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்குப் பதிலாக தகுதியான தொழிற்சாலைகளுக்கு கால அளவை நீட்டித்து தொகுப்பாக வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும், முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை முதன்மையாளர் விருது' ரூ.1 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.32 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களைக் கொண்டே பிரசாரம் செய்யப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.2 கோடி செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story