வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் ரூ.3¾ லட்சத்தை இழந்த சென்னை பெண் டெல்லியில் முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட 2 நைஜீரியர்கள் கைது


வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் ரூ.3¾ லட்சத்தை இழந்த சென்னை பெண் டெல்லியில் முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட 2 நைஜீரியர்கள் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 11:51 PM GMT (Updated: 3 Sep 2021 11:51 PM GMT)

திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்துக்காக பிரபல திருமண இணையதளத்தில் செல்போன் எண் உள்ளிட்ட தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இவருக்கும், இந்த இணையதளத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்ற பெயரில் பதிவு செய்திருந்த நபருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை பெண்ணிடம் மும்பையில் இருந்து ஒரு பெண் தொடர்புக்கொண்டு, ‘நெதர்லாந்து நாட்டில் இருந்து டாக்டர் முகமது சலீம் உங்களுக்கு பரிசுப்பொருள் பார்சல் அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக்கொள்வதற்கு ரூ.28 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். உடனே சென்னை பெண்ணும் அது என்ன பரிசாக இருக்கும் என்ற ஆவலில் மும்பை பெண் அனுப்பிய வங்கி கணக்கில் உடனடியாக பணத்தை செலுத்தினார்.

ஆனால் சிறிது நேரத்தில் மும்பை பெண் மீண்டும் தொடர்புக்கொண்டு, ‘உங்களுக்கு வந்துள்ள பார்சலை ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, அதில் வெளிநாட்டு ‘கரன்சி’ நோட்டுகள் இருக்கிறது. எனவே இதற்கு அபராதமாக ரூ.77 ஆயிரமும், இந்த கரன்சியை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு ரூ.1 லட்சமும் செலுத்த வேண்டும் என்று கூறினார். உடனே சென்னை பெண்ணும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பணத்தை அனுப்பினார்.

நகையை அடமானம் வைத்து...

பின்னர் மும்பை பெண் மீண்டும் தொடர்புக்கொண்டு வங்கி கணக்கை புதுப்பிக்க ரூ.95 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சென்னை பெண் பணத்தை கட்ட மறுத்துள்ளார். இந்தநிலையில் டாக்டர் முகமது சலீமின் சகோதரர் ஆசீப் என்று கூறி பேசிய நபர், ‘எனது சகோதரர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த பணத்தை நீங்கள் செலுத்தவில்லை என்றால் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்’ என்று மிரட்டி உள்ளார்.

எனவே சென்னை பெண் ரூ.95 ஆயிரத்தையும் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் அனுப்பினார். இதே பாணியில் ரூ.20 ஆயிரத்தையும் அவர்கள் பெற்றுள்ளனர். இந்தநிலையில் டாக்டர் முகமது சலீம் நெதர்லாந்து நாட்டில் இருந்து இந்தியா வருவதற்கு விமான பயண கட்டணமாக ரூ.50 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். கையில் பணம் இல்லாததால் நகையை அடமானம் வைத்து அந்த பெண் அனுப்பி உள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து டாக்டர் முகமது சலீம் கடந்த ஜூலை 17-ந் தேதி டெல்லி விமான நிலையத்துக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் அவர் இந்தியாவில் நுழைவதற்கு பி.ஐ.ஓ. கார்டு இல்லை என்பதால், அதற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அவர் 14 நாட்கள் சிறையில் இருக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.

கேட்டபோது எல்லாம் பணத்தை வாரி கொடுத்த சென்னை பெண், ‘நீங்கள் செல்போனில் ‘லோக்கேஷன்’ (இருக்கும் இடத்தை) அனுப்புங்கள். பணம் அனுப்புகிறேன்’ என்று சொல்லியுள்ளார். உடனே அவரது எண் ‘பிளாக்’ செய்யப்பட்டுவிட்டது. அதன் பின்னர்தான், வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததை சென்னை பெண் உணர்ந்தார்.

நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் கொடுத்து திருமண செய்வதாக கூறி தன்னை திட்டமிட்டு ஏமாற்றிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவுடன் தன்னிடம் பணம் பறிக்கப்பட்டது தொடர்பான வங்கி கணக்கு ஆவணங்களையும், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பேசிய செல்போன், ‘வாட்ஸ்-அப்’ எண் போன்ற விவரங்களையும் அளித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

நைஜீரியர்கள் கைது

போலீசார் கடந்த ஒரு மாதமாக நடத்திய புலன் விசாரணையில், இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் டெல்லி உத்தம் நகரில் தங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு, மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ (வயது 31), சிலிட்டஸ் இகேசுக்வு (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், வங்கி கணக்கு அட்டைகள், ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘பேஸ்-புக்’ போன்ற சமூகவலைத்தளங்களில் வெளிநாட்டு டாக்டர்கள், தொழில் அதிபர்கள் படங்கள் மற்றும் அவர்களுடைய தகவல்களை திருடி, திருமண இணையதளத்தில் போலியான பெயர்களில் பதிவு செய்வோம்.

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் இருக்கும் பெண்களிடம் ஆசையை தூண்டியும், பரிசுப்பொருட்கள் அனுப்பி வைத்திருக்கிறோம் என்று பொய் சொல்லியும் கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை பறிப்போம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று நம்ப வைப்பதற்காக வெளிநாட்டு எண்களில் இருந்து தொடர்பு கொள்வோம்.

எங்களுடைய இந்த மோசடி வலையில் பல பெண்கள் வீழ்ந்துள்ளனர்’ என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

திருமணத்துக்காக இணையதளங்களில் பதிவு செய்யும் புகைப்படங்கள், தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமல் தனிப்பட்ட செல்போன், ‘வாட்ஸ்-அப்’ எண் போன்ற விவரங்களை பகிர வேண்டாம். நேரில் பார்க்காமலும், தீர விசாரிக்காமலும் எக்காரணத்தை கொண்டும் பணம் எதுவும் கொடுக்கக்கூடாது. பரிசு பார்சல் என்று ஆசைவார்த்தை காட்டினாலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story