தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை: போலீஸ் கமிஷனர்


தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை: போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 4 Sep 2021 10:10 PM GMT (Updated: 4 Sep 2021 10:10 PM GMT)

சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சான்றிதழ்-வெகுமதி
சென்னை பெண்ணிடம் திருமண இணையதளத்தில் நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.3.45 லட்சம் பணம் பறித்த வழக்கு, நடிகர் ஆர்யா பெயரை பயன்படுத்தி ஜெர்மனிவாழ் இலங்கை பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கு உள்பட ‘சைபர் கிரைம்’ தொடர்பான முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணி, நாகஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

கமிஷனர் பேட்டி

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் கமிஷனர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். எனவே தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய குழு
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மூழ்கி மாயமாகும் சம்பவங்களை தடுப்பதற்காக மாநகராட்சி, மீனவர்கள், போலீசார் இணைந்து குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.‘சைபர் கிரைம்’ தொடர்பான குற்ற வழக்குகளை தடுப்பதற்காக கமிஷனர் அலுவலகத்தில் ‘சைபர் கிரைம் லேப்’ உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story