சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையங்கள்; அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்


சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையங்கள்; அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Sep 2021 10:34 PM GMT (Updated: 4 Sep 2021 10:34 PM GMT)

சென்னையில் 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா தடுப்பூசி மையங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி மையம்
சென்னை அடையாறு மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட வெங்கட்ரத்னம் நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை நிதியுதவியாக ரூ.6 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டகத்தையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கே.என்.நேரு கூறியதாவது:-

200 முகாம்களாக விரிவு
முதல்-அமைச்சரின் பல்வேறு ஆலோசனைகள் அடிப்படையில், மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள், வணிகர்கள், குடிசைப் பகுதிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஆகியோருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலத்துக்கு 3 தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வந்தன. இந்தத் தடுப்பூசி முகாம்கள் தற்போது வார்டுக்கு 1 என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

குடிசைப் பகுதிகளில்...
கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய தடுப்பூசி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், ஒரு மண்டலத்துக்கு ஒரு மையம் என 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 41 லட்சத்து 45 ஆயிரத்து 452 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகளில் மட்டும் சுமார் 56 ஆயிரத்து 63 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story